ஈஷா யோகா மையத்தில் மத்திய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தையா? – பிரேமலதா பதில்

சென்னை,

தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் அந்தக் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு செல்லுமா? அல்லது மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையுமா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியில் இடம்பெறும் என்று மட்டும் அவர் அறிவித்து இருந்தார்.தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தே.மு.தி.க. இதுவரை பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய இணை மந்திரி எல்.முருகன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முக்கியமாக இந்த விழாவில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.

இருவரும் அருகருகே அமர்ந்து சிவராத்திரி விழாவை பார்த்தனர். அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டனர். அந்த சமயம் கூட்டணி தொடர்பாகவும் அவர்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மத்திய மந்திரிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்த சந்திப்பானது அ.தி.மு.க. பா.ஜ.க. தேமு.தி.க. கூட்டணிக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறப்பட்டது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஈஷா யோகா மையத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரிடம் மரியாதை நிமித்தமாக பேசினேன். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்; ‘பி கூல், நோ டென்ஷன்’(BE COOL, NO TENSION) ஆட்சியில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், தமிழ்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவது நல்ல விஷயம். அதனால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் நாம் முதலில் அதை வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link