டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே.!

கொழும்பு,

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வரும் 38வது லீக் ஆட்டத்தில் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசாங்க அதிரடி காட்டினார். அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ரத்நாயகே 44 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இறுதியில் இஇலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் மசகட்சா, முசரபாணி, கிரீமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது.

தொடக்க பேட்ஸ்மேன்களான பென்னெட் மருமணி ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மருமணி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. இலங்கை பந்துவீச்சாளர்கள் ஜிம்பாப்வேக்கு நெருக்கடி கொடுத்தாலும், ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் நேர்த்தியாக ஆடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக பென்னெட் அரைசதமடித்து, 63 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக விளையாடி 45 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர் வரை ஆட்டம் பரபரப்புடன் காணப்பட்டது. இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதன் மூலம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்தது. இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link