தந்தையின் பாலியல் தொல்லையால் விஷம் குடித்து பள்ளியில் மயங்கிய மாணவி… ஊட்டியில் நடந்த வக்கிரம்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 12-ம் வகுப்பும், இளைய மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் சிறுவயதில் இருந்தபோதே, குடும்ப பிரச்சினை காரணமாக அவர்களது தாய் கணவரை பிரிந்து சென்றுவிட் டார். இதனால் மகள்கள் இருவரும் தந்தையுடன் வசித்து வந்தனர். அவர்களது தந்தை அதே பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அவரது தந்தை கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. தந்தை என்பதால் வெளியே சொல்ல முடியாமல் மாணவி தவித்து வந்துள்ளாள். இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வந்த தந்தை, மீண்டும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து கொண்டு அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் குடித்து உள்ளாள்.

பின்னர் பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவி மயங்கி விழுந்தாள். அப்போது தந்தை பாலியல் தொல்லை அளித்ததால், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக சக மாணவிகளிடம் கூறினாள். இதை அறிந்த ஆசிரியர்கள் உடனே குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, மாணவியை ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளாள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மாணவியின் தந்தையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஊட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source link