கேரளா: மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து ஒருவர் படுகாயம்

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பனூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஷமித் லால். இவர் இன்று பொலியூர் பகுதியில் கட்டுமான பணிக்காக லாரியில் மண்ணை கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

கட்டுமான பணிக்காக ஜேசிபி மூலம் மண்ணை தோண்டி அதை லாரியில் கொண்டு செல்லும் வேலை நடைபெற்று வந்தது. அந்த வகையில் ஜேசிபி மூலம் மண்ணை தோண்டிக்கொண்டிருந்தபோது அங்கு லாரியை நிறுத்திய ஷமித் லால் அதன் அருகே நின்றுகொண்டிருந்தார்.

மண்ணை ஜேசிபி மூலம் தோண்டியபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. குண்டு வெடித்ததில் ஜேசிபி அருகே நின்றுகொண்டிருந்த நின்றுகொண்டிருந்த லாரி டிரைவர் ஷமித் லால் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்த ஷமித் லாலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதேபோல், கண்ணூர் மாவட்டத்தின் மனோலிகவ் பகுதியில் உள்ள கோவில் அருகே இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

கோவில் கொடை விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் வாசல் அருகே மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் வாகனம் அருகே இந்த குண்டு வீச்சு தாக்குதல் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link