பருவமழை குறைவால் விவசாய நிலங்கள் பாதிப்பு: தூத்துக்குடி கலெக்டர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த 19.2.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விளாத்திகுளம், எட்டையபுரம், கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் இன்று மேல்மாந்தை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சி நிலை மற்றும் சேத விபரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். பயிர் சேதங்கள் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link