சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் – விஸ்வநாதன்

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த 14, 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடருவார். அணியின் விக்கெட் கீப்பராக டோனி தொடருவாரா? என்பது குறித்து அணியின் கேப்டன், பயிற்சியாளர் முடிவு செய்வார்கள். நாங்கள் சீனியர் மற்றும் இளம் வீரர்களை சமமான விகிதத்தில் அணியில் எடுத்துள்ளோம். வரும் சீசனில் அணி நன்றாக விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய வீரர்கள் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஏற்கனவே 25 வீரர்கள் எடுத்துள்ளோம். அதில் யார், யார் விளையாடுவார்கள், விளையாடமாட்டார்கள் என்பதை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் தான் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.



Source link