சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப் படும் புறநகர் மின்சார ரெயில்களின் சேவையில் கடந்த 20-ந் தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முக்கிய வழித்தடங்களில் ரெயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் தெற்கு ரெயில்வே கோரி உள்ளது.
ஏற்கனவே, மாநகர போக்குவரத்து கழகம் 20-ந் தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கடற்கரை ரெயில் நிலையம், கிண்டி, தாம்பரம் வழியாக 75 பஸ்களும், கிண்டி, தாம்பரம் வழியாக 43 பஸ்கள், தாம்பரம் கூடுவாஞ்சேரி வழியாக 64 பஸ் களும், கடற்கரை ரெயில் நிலையம், பூங்கா ரெயில் நிலையம், எழும்பூர் வழியாக 121 பஸ்கள், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் வழியாக 55 பஸ் கள், பரங்கிமலை ரெயில் நிலையம் வழியாக 20 பஸ்களும் வழக்கமாக இயக்கப்படுகிறது.
மேலும் கூடுதலாக ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து 27 பஸ்கள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பஸ்கள், எழும்பூர் ரெயில் நிலையம் முதல் தலைமைச்செயலகம் வழியாக 8 பஸ்களும், நுங்கம்பாக்கம் வழியாக 5 பஸ்கள், பரங்கிமலை ரெயில் நிலையம் வழியாக 5 பஸ்கள் என மொத்தம் 60 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பஸ்கள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
