பல்லகெலே,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் நிறைவடைந்து தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இலங்கையின் பல்லகெலேவில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கை – இங்கிலாந்து மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறியதாவது,
இந்த ஆட்டம் மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது. எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆட்டம் குறைவான ரன்கள் கொண்டதாக மாறியதற்கு மைதானம் முக்கிய பங்காற்றியது. நாங்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் என கூறவில்லை. ஆனால் முக்கியமான தருணங்களில் எங்கள் பேட்ஸ்மேன்கள் அவசரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்த உலகக்கோப்பையில் நாங்கள் ஒரு ஆல்ரவுண்டர் உள்பட 5 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினோம். பெரும்பாலான அணிகளை குறைவான ரன்களில் கட்டுப்படுத்தினோம்.
இந்த ஆட்டத்தில் ரன் சேசிங்கின்போது இறுதிவரை கொண்டுசெல்ல வேண்டும் என பேசினோம். இந்த சூழ்நிலையில் நாங்கள் நிறைய ஆட்டங்களை ஆடியுள்ளோம். ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று சரியான , சிறந்த முடிவை எடுக்க வேண்டும்.
இன்றைய ஆட்டத்தில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இது மோசமான ஆட்டம்தான் ஆனால் உலகக்கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். ஆனாலும், அடுத்த ஆட்டங்களில் மீண்டும் நாங்கள் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும்.
என்றார்.
