தூத்துக்குடியில் கல்லூரியில் ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டம்

அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் நேற்று ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாநில அளவில் கல்லூரி ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

அரசாணை எண் 5-ன் படி, அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போலவே, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகையை (Arrears) உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து மூட்டா (MUTA) அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் சிவஞானம் கூறுகையில், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும். அதன் தொடர்ச்சியாக, வரும் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களில் ‘அரசாணை எண் 5’-ஐத் திருப்பிக் கொடுக்கும் போராட்டமும், சனிக்கிழமை சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளன. மேலும் மார்ச் 5-ம் தேதி முதல் சென்னை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு வ.உ.சி. கல்லூரி கிளைத் தலைவர் சுபா தலைமை தாங்கினார். இதற்கான ஏற்பாடுகளைக் கிளைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், கிளைப் பொருளாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் திரளான ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Source link