‘2035-ம் ஆண்டுக்குள் 200-க்கும் மேற்பட்ட கப்பல்களை கொண்ட படையாக மாற்றுவோம்’ – கடற்படை தளபதி

சென்னை,

இந்திய கடற்படை பணிகளில் ஐ.என்.எஸ். அன்ஜாதிப் கப்பலை இணைக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

“ஐ.என்.எஸ். அன்ஜாதிப் கப்பல் அதிநவீன ஆழமற்ற நீர் சோனார்கள், இலகு ரக டார்பிடோக்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் மற்றும் போர் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கப்பல் நமது நாட்டின் ஆழகடல் போர் திறனை பலப்படுத்துகிறது.

இந்தக் கப்பல் தெற்கில் உள்ள லார்சன் அண்ட் டப்ரோ காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில், கிழக்கில் உள்ள கொல்கத்தாவை சேர்ந்த பொறியாளர்களால் கட்டப்பட்டது. அதே சமயம், இந்த கப்பல் வடக்கில் உள்ள காசியாபாத்தில் வடிவமைக்கப்பட்ட போர் மேலாண்மை அமைப்பைக் கொண்டுள்ளது. அதோடு, மேற்கில் உள்ள அன்ஜாதிப் தீவின் பெயர் இந்த கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியாவிற்கான நமது முயற்சியின் மூலம், இந்தக் கப்பல் வலுவான திறன் மற்றும் செயல்பாட்டுத் திறனுடன் கடற்படை சேவையில் இணைகிறது. நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு மற்றும் கடலுக்கடியில் நடக்கும் போர்களில் திறன்களை வலுப்படுத்துவதில் கடற்படை தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

2025 ஆம் ஆண்டில், இந்திய கடற்படையில் 12 போர்க்கப்பல்களும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் இணைக்கப்பட்டன. 2026 ஆம் ஆண்டில் மேலும் 15 கப்பல்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2047 ஆம் ஆண்டுக்குள் கப்பல் கட்டுமானத்தில் முழுமையான தன்னிறைவை அடைவதும், முழுமையான தற்சார்பு இந்தியாவின் படையாக பரிணமிப்பதும் கடற்படையின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையாகும்.

2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையை 200-க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்ட கடல்சார் படையாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் தடமானது இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதற்கு அப்பால் நீண்டுள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link