சென்னை,
சென்னை சென்டிரலில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று, மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில்வேக்கு நிதி ஒதுக்கியது குறித்து தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், தெற்கு ரெயில்வே நிர்வாக தலைமை அதிகாரி சுஷில் குமார் மவுரியா ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு கடந்த மத்திய பட்ஜெட்டில் ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.7,611 கோடியும், கேரளா ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.3,795 கோடியும் என மொத்தம் ரூ.11,406 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு புதிய மற்றும் அகலப்பாதை திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.
தமிழகத்தில் நடக்கும் புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்திட, தமிழக அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ரெயில் தண்டவாளங்களில் தலா 2 நடைமேடைகள் என மாற்றப்பட்டு படிப்படியாக பணிகள் நடைபெற்று வருகின்றன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தண்டவாளம், நடைமேடை பணிகள் மே மாதத்துக்குள் முடிக்கப்படும்.
அதன்பின், தாம்பரத்துக்கு மாற்றப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே தொடங்கி நிறுத்தப்பட்ட கூடுவாஞ்சேரி- ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம் – கடலூர் ஆகிய ரெயில் பாதை பணிகள் மீண்டும் தொடங்க பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையப் பணிகளில் ரெயில்வே துறை சார்ந்த பணிகள் முடிந்துள்ளன. ஆனால், ரெயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையத்துக்கான அணுகுசாலை, நடைமேம்பாலம் உள்ளிட்ட மாநில அரசு சார்ந்த பணிகள் நடைபெறவேண்டியுள்ளது. அந்த பணிகள் நிறைவடைந்ததும், கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் பணிகள் நிறைவடைந்துள்ளன. தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த மாதம் ரெயில் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
