சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பீகார் மாநிலத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த தம்பதியர் திரு. கவுரவ்குமார் அவரது மனைவி திருமதி புனிதாகுமாரி மற்றும் அவரது 2 வயது குழந்தை ஆகியோர் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் சென்னை மாநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட மூவரது உடல்களையும் அவர்களது சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல உதவி தேவைப்படுகிறது என்ற செய்தியை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் எவ்வித கட்டணமுமின்றி, அவர்களது உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கின் முழுவிவரம்:-
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கவுரவ்குமார் (வயது 24). இவர், வேலை தேடி தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் கடந்த 21-ந்தேதி சென்னைக்கு வந்தார். வேலைக்காக சென்னையில் தங்கி இருக்க முடிவு செய்த கவுரவ்குமார் சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் சிக்கந்தரை சென்று பார்த்தனர்.
அவர் பாலிடெக்னிக் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் கவுரவ்குமார் மற்றும் அவரது மனைவி, குழந்தையை தங்கவைத்தார். கடந்த 24-ந்தேதி அன்று சிக்கந்தர் தனது நண்பர்கள் லலித் பிரசாத், விகாஷ் யாதவ் ஆகியோருடன் அதே கட்டிடத்தில் உட்கார்ந்து மது அருந்தினார். அப்போது கவுரவ்குமாரின் மனைவியிடம் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தனர். இதனை கவுரவ்குமார் தடுத்ததால் அவரையும், அவரது மனைவி மற்றும் குழந்தையையும் அடித்துக்கொன்று விட்டனர்.
பின்னர் 3 உடல்களையும் தனித்தனி சாக்குமூட்டையில் கட்டினார்கள். சிறுவனின் உடல் மத்திய கைலாஷ் ரெயில் நிலையம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் வீசப்பட்டது. கவுரவ்குமாரின் மனைவியின் உடலை பெருங்குடி குப்பைமேட்டில் வீசிவிட்டனர். கவுரவ்குமார் உடலை ஸ்கூட்டரில் தூக்கி சென்றபோது அடையார் இந்திரா நகர் 1-வது அவென்யூ பகுதியில் கீழே விழுந்துவிட்டது. இதனால் உடலை அங்கேயே போட்டுவிட்டு சிக்கந்தரும், அவருடைய நண்பர்களும் தப்பி சென்றுவிட்டனர்.
சிக்கந்தரும், அவரது நண்பர்கள் லலித்குமார், விகாஷ் யாதவ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சிக்கந்தர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட கவுரவ்குமார் உடலும், அவரது மகனின் உடலும் போலீசாரால் மீட்கப்பட்டது. பெருங்குடி குப்பைமேட்டில் வீசப்பட்ட கவுரவ்குமார் மனைவியின் உடல் கிடைக்கவில்லை.
கடந்த 3 நாட்களாக 100 போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் மோப்ப நாய் உதவியுடன் தேடினார்கள். கடந்த சனிக்கிழமை காலையில் அவருடைய உடல் மீட்கப்பட்டது. 3 பேரின் உடல்களும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. கவுரவ்குமாரின் அண்ணன் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்க்கிறார். கொல்லப்பட்ட 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு பிறகு பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்க போலீசார் திட்டமிட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சிக்கந்தரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்தான். அவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். போலீஸ் விசாரணையில் அவர், முன்னுக்குபின் முரணான தகவல்களை முதலில் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த கொலை தொடர்பான உண்மைகளை வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.
கொலை நடந்த அன்று விடுமுறை என்பதால் காலையில் இருந்தே அதிகளவு மது அருந்தியதாகவும், அப்போது கவுரவ்குமாரையும் அவரது மனைவியையும் மது அருந்தும்படி கூறியதாகவும் அதற்கு அவர்கள் மறுத்ததாகவும் இதையொட்டி தகராறு நடந்ததாகவும், அப்போது கவுரவ்குமார் மனைவியிடம் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாகவும் சிக்கந்தர் தனது வாக்குமூலத்தில் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.
