தெஹ்ரான்,
ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார்.
ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட மறுத்தது. இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, ஈரான் உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28-ந்தேதி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து திடீர் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
இதையடுத்து அமெரிக்கா-இஸ்ரேலை பழிதீர்ப்போம் என்று சூளுரைத்துள்ள ஈரான், தொடர்ந்து பதிலடியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள 27 அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாங்கள் இப்போது செய்ய வேண்டியதை செய்யாவிட்டால், விரைவில் அணுஆயுத யுத்தம் தொடங்கியிருக்கும். அவர்கள் பல நாடுகள் மீது குண்டுகளை வீசியிருப்பார்கள். ஏனெனினில், அவர்கள் குறுகிய மனம் படைத்த மனநோயாளிகள். அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கும்போதே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி செய்யது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிக்கலான அணு ஆயுத பேச்சுவார்த்தைகள், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் போல் கையாளப்படுகின்றன. எதார்த்தமான உண்மைகளை பொய்களைக் கொண்டு மறைக்கும்போது, நடைமுறைக்கு சாத்தியப்படாத கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியாது.
இதன் விளைவாக, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ராஜதந்திர நெறிமுறைகளுக்கும், அமெரிக்க மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
