சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைவான காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட திமுக பேச்சுவார்த்தை குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 27ம் தேதி திமுக, இந்திய கம்யூனிஸ்டு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டி தலைமையிலான 4 பேர் குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக , இந்திய கம்யூனிஸ்டு இடையே இன்று 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்து. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையிலான குழு திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்டு 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
