ஈரான் உச்ச தலைவர் கொலைக்கு கண்டனம் – காஷ்மீரில் தடையை மீறி ஏராளமானோர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீநகர்,

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து திடீர் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும் ஈரான் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

இதையடுத்து அமெரிக்கா-இஸ்ரேலை பழிதீர்ப்போம் என்று சூளுரைத்துள்ள ஈரான், தொடர்ந்து பதிலடியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள 27 அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில், ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொலை செய்யப்பட்டதை கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள புத்கம் மாவட்டத்தின் மகம் பகுதியில் இன்று ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2-ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈரான் உச்ச தலைவர் படுகொலையை தொடர்ந்து, அசாதாரண நிகழ்வுகள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல இடங்களில் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், மகம் பகுதியில் இன்று தடையை மீறி ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அயத்துல்லா அலி காமேனியின் புகைப்படத்தை ஏந்தியபடி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link