சென்னை,
சட்டசபை தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணி இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
கட்சி இரண்டாக உடைந்த நிலையில், பாமகவும், கட்சியின் சின்னமான மாம்பழமும் அன்புமணி வசம் உள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் மீது டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்தது. அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணிக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் வேட்புமனு தாக்கல் செய்த சில மணி நேரங்களில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் உதவியாளர் சாமிநாதன் என்பர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது, டாக்டர் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக ஜி.கே.மணி, அருள் ஆகியோர் உள்ளனர். ஆனால், மாநிலங்களவை தேர்தலில் ஒருவர் மனுத்தாக்கல் செய்கிறார் என்றால், 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும்.
அந்த வகையில், டாக்டர் அன்புமணிக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும், அதிமுக கூட்டணியில் அவர் இருப்பதால், அக்கட்சி உறுப்பினர்களும் 7 பேர் முன்மொழிந்தால் போதுமானது.
ஆனால், டாக்டர் ராமதாஸ் உதவியாளர் சாமிநாதனுக்கு 2 எம்.எல்.ஏ.க்களே முன்மொழிவார்கள் என்பதால், நாளை வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அதுவும் சுயேச்சையாக அவர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால், அன்புமணிக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது என தெரிகிறது.
