சென்னை,
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.
அதே போன்று தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி (தனி) தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனுவை நேற்று அளித்தார். தூத்துக்குடி முன்னாள் எம்.பி., எஸ்.ஆர்.ஜெயதுரை சென்னை ஆயிரம்விளக்கு, தியாகராயநகர் ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனு வழங்கினார்.
வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்று வேடமணிந்தவரை அழைத்து வந்து இளைய கட்டப்பொம்மன் என்பவர் விருப்ப மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் கட்டபொம்மனின் 8-வது வம்சத்தை சேர்ந்தவர்கள். அதனால் கட்டபொம்மன் அடையாளத்தோடு வந்துள்ளேன். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஒரு மனுவையும், திருத்தணி தொகுதிக்கு எனது பெயரிலும் ஒரு மனுவையும் அளித்துள்ளேன்.’ என்றார்.
இந்த நிலையில், தி.மு.க.வில் விருப்ப மனு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே அண்ணா அறிவாலயத்தில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அலைபோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
