நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

நெல்லை,

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு தேநீர்க்கடை முன்பு கடந்த 2-ம் தேதி இரவு ஒரு குழுவினர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென அரிவாளால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாக வெட்டியது.

இந்த தாக்குதலில் பெரும்பத்து இந்திராகாலனியை சேர்ந்த ஜான் (வயது 42) மற்றும் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிநாத் கட்டா (50) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் நெல்சன்(60), கணேசன்(52), பிரபாகரன்(50), ராமசாமி(70) மற்றும் புளியங்குளத்தை சேர்ந்த சசிகுமார் (26) ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தென்னிமலையைச் சேர்ந்த கண்ணன்(20), அந்தோணி மைக்கேல்ராஜ்(19), உச்சிமாகாளி(23), வசந்தகுமார் (19), சுப்பையா(19), கல்யாணி(20), இசக்கிராஜா (19) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் நடந்த தொடர் கொலைச் சம்பவங்களுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவத்தில் கைதானவர்கள் அனைவரும் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். இவர்கள் கடந்த சில நாட்களாக பெரும்பத்து கிராமத்தில் நோட்டமிட்டு, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் கூடும் இடத்தை கண்டறிந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு வேகமாகத் தப்பிப்பதற்காக, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடி இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் பலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நாங்குநேரி பகுதியை சேர்ந்த மகாராஜன் உள்பட மேலும் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் இரட்டைக்கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கொலை சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link