அரசியலுக்கு வருபவர்கள் சந்திக்ககூடிய பிரச்சினைகள்…மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல்காந்தி எம்.பி., 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ளார். அவர் நேற்று இடுக்கி மாவட்டம் குட்டிக்கானம் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்டார்.

அங்கு அவர் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மேலும் பழங்கால தற்காப்பு கலையான களரி பயிற்சியை விழா மேடையிலேயே மாணவி ஒருவருடன் சேர்ந்து செய்தார்.

மிகவும் தத்ரூபமான உடல் அசைவுகளுடன் அவர் களறி பயிற்சி செய்ய முயன்றது கல்லூரி மாணவர்களையும் நிர்வாகிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ராகுல் காந்தி களறி பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

மேலும் அந்த கல்லூரி விழாவில் அரசியலுக்கு வருபவர்கள் சந்திக்ககூடிய பிரச்சினைகள் குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:-

நீங்கள் அரசியல்வாதியாக விரும்பினால், அது ஒரு விரும்பத்தகாத வேலை, நீங்கள் அதை தீவிரமாக செய்ய விரும்பினால் உங்களிடம் ஒரு குறிப்பிட்ட மதிப்பு அமைப்பு இருந்தால், அது கடினமான வேலை. சரியான காரணங்களுக்காக அரசியலில் நுழைபவர்கள் கஷ்டங்களையும் விமர்சனங்களையும் எதிர் கொள்ள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் நிறைய துன்படவும், அடிபடவும் தயாராக இருக்க வேண்டும்.

நான் அதை எனக்காகவே செய்கிறேனா? என்று உங்களை நீங்கள் கேட்டுக்கொண்டால் உங்களுக்கு ஒரு பாதை இருக்கிறது. ஆனால் நீங்கள் சில கருத்துகள் அல்லது மதிப்புகளை பாதுகாக்க அதை செய்கிறீர்கள் என்று சொன்னால் அந்தப்பாதை முற்றிலும் வேறுபட்டது. ஒன்று விரும்பத்தகாத கடினமான பாதை. ஆனால் நீங்கள் நிறைய கற்றுக்கொள்கிரீர்கள். உண்மையில் நீங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறீர்கள். மற்றொன்று எளிதான பாதை. ஒருவேளை உங்களுக்கு ஒரு பெரிய வீடும், நிறைய பணமும் இருக்கலாம்.

எனது அனுபவத்தில் நான் முதன் முதலில் அரசியலில் சேர்ந்தபோது, மக்கள் பொதுவாக சொன்னது அரசியலில் நேர்மையாக இருக்க முடியாது என்று தான். அதை நான் நம்ப மறுக்கிறேன். அரசியலில் நேர்மை சாத்தியம் என்ற கருத்தை நான் சோதித்து பார்க்கிறேன்.

ஒரு அரசியல்வாதி எவ்வளவு வெளிப்படையாக இருக்க முடியும்? வரம்புகள் எங்கே உள்ளன? என்பதை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறேன். நீங்கள் எவ்வளவு வெளிப்படையாக இருக்க முடியும்? உங்களுக்கான வரம்புகள் எங்கே?

ஒருவரை அரசியல்வாதி, தொழில்நுட்ப வல்லுநர், பொறியாளர் என்று அழைப்பது சுருக்கமான வரையறைகள் என்று கருதுவேன். நான் அரசியலில் ஈடுபடவில்லை எனில், விண்வெளி உலகில் தொழில்முனைவோராக இருந்திருப்பேன். நான் ஒரு விமானி, என் தந்தை, மாமாவும் கூட விமானிகள்தான்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Source link