புதுடெல்லி
மேற்கு வங்காளத்தில் சர்வதேச சந்தல் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். எனினும், அவரை வரவேற்க ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேரில் செல்லவில்லை என கூறப்படுகிறது.
அவருடைய அரசிலுள்ள வேறு மந்திரிகளும் கூட ஜனாதிபதியை வரவேற்பதற்காக நேரில் செல்லவில்லை. இதேபோன்று மாநாடு நடைபெறும் இடமும் வேறிடத்திற்கு மாற்றப்பட்டது. முதலில் நடைபெற இருந்து பிதான் நகர் பகுதியில் இருந்து கொசாய்பூருக்கு மாநாடு மாற்றப்பட்டது. அதில் குறைவான அளவுக்கே பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில், அந்த மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பழங்குடியினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக விசயங்களை செய்துள்ளது. ஆனால், இந்த பகுதியில் வளர்ச்சி உங்களை வந்தடைந்ததா? அதுபோன்று எதுவும் எனக்கு தெரியவில்லை.
இந்த மாநாட்டுக்கு வரவே சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர் என நான் நினைக்கிறேன். சந்தல் பழங்குடியினர் ஒற்றுமையாக இருக்க சிலர் விரும்பவில்லை போலும் என பேசினார். இதன்பின்னர் அவர், மாநாட்டுக்கான இடம் ஏன் மாற்றப்பட்டது என எனக்கு தெரியவில்லை. நானும் வங்காள பெண்தான். மம்தா என்னுடைய இளைய சகோதரி போன்றவர்.
ஆனால், அவர் ஏன் மனவருத்தத்தில் இருக்கிறார் என தெரியவில்லை என பேசினார். இதனை குறிப்பிட்டும், முர்முவின் சில வீடியோக்களை வெளியிட்டும் பேசிய பிரதமர் மோடி, இது வெட்கக்கேடானது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது. பழங்குடியினத்தில் இருந்து வந்த ஜனாதிபதி வெளிப்படுத்திய வலி மற்றும் வேதனை ஆகியவை இந்திய மக்களின் மனதில் ஆழ்ந்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது. ஜனாதிபதி அலுவலகம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதன் புனித தன்மை மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
