பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மகன் நிஷாந்த் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்

பாட்னா,

பீகாரில் நீண்ட காலமாக முதல் மந்திரியாக பதவி வகித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்து, டெல்லி அரசியலுக்கு மாற முடிவு எடுத்துள்ளார். இந்த நிலையில், அவரது அரசியல் வாரிசாக பீகாரில் அவரது மகன் நிஷாந்த் குமார் களமிறக்கப்படுகிறார்.

நிஷாந்த் குமாரின் அரசியல் வருகைக்கு நிதிஷ் குமார் பச்சைக்கொடி காட்டிவிட்டார் என அம்மாநில மந்திரி விஜய் குமார் சவுத்ரி உறுதிப்படுத்தினார். இது பீகார் அரசியலில் பெரும் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. நிஷாந்த் குமார் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் முறைப்படி இணைந்தார். பாட்னாவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கட்சியின் எதிர்கால நகர்வுகள் குறித்து நேற்றுமுன்தினம் கட்சி நிர்வாகிகளுடன் நிஷாந்த் குமார் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நிஷாந்த் குமாருக்கு பீகாரில் துணை முதல் மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று பேச்சுகள் அடிபடுகின்றன. இது தொடர்பாக ஒருமித்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும் நிதிஷ் குமார் ஆதரவாளர்கள் கூறினர்.

Source link