புதுடெல்லி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது. இதில், மேற்காசிய மோதல், அதனால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, மேற்காசியாவில் ஏற்பட்டு உள்ள நெருக்கடி பற்றி நாடாளுமன்றத்தில் முழுமையான அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும். விரிவான விவாதம் மிக அவசியம் என வலியுறுத்தினார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்பட போகிறது. எரிபொருள் நெருக்கடி எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.
எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர். இந்த அவையில் இதுபோன்ற விவாதங்கள் நடந்துள்ளதற்கான முன்மாதிரிகள் உள்ளன என கூறினார்.
பிற எதிர்க்கட்சி தலைவர்களும் கூட அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று பேசும்போது, இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது முன்னறிவிப்பின்றி அமெரிக்காவால் நடத்தப்படும் இந்த தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இதனால், உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து உள்ளது. முக்கிய வர்த்தக வழிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், உலகம் முழுவதும் கணக்கிட முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். ஸ்திரத்தன்மையற்ற சூழலும் ஏற்படும் என கூறினார்.
