கோவை,
மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு 10.30 மணியள வில் தனது காதலனுடன் விமானநிலைய பின்புறம் பிருந்தாவன்நகரில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 பேர் மாணவியை அரிவாளை காட்டி மிரட்டினர். இதை அவருடைய காதலன் கண்டித்தார். உடனே கார் கண்ணாடியை அரிவாளால் உடைத்து காதலனை வெட்டினர். பின்னர் அவர்கள் மாணவியை கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி (வயது30), காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த தவசி (20) ஆகிய 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம், அரிவாளால் வெட்டப்பட்டு காயம் அடைந்த காதலனுக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின் நிலை குறித்து, இந்த வழக்கில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த அரசு வக்கீல் பி.ஜிஷா கூறியதாவது:-
இந்த கொடூர சம்பவத்துக்கு பிறகு கல்லூரி மாணவி மனரீதியாக மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்தார். எனவே அவருக்கு நான் பல்வேறு அறிவுரை கூறி தேற்றினேன். டாக்டர்கள் மூலமும் மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. மாணவி தற்போது நலமுடன் உள்ளார். மாணவியை மனரீதியாக தேற்ற காதலன் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்.
வழக்கு விசாரணைக்காக அந்த மாணவி, மதுரையில் இருந்து அடிக்கடி வர வேண்டி இருந்ததால் அவருடைய காதலன் பெற்றோரின் சம்மதத்துடன் தனது வீட்டில் அறை ஒதுக்கி கொடுத்து தங்க வைத்தார். மாணவிக்கும், அவரது காதலனுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவி பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.
பின்னர் பட்டப்படிப்பை மதுரையில் முடித்துள்ளார். முதுகலை படிப்பை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தொடர்ந்து உள்ளார். காதலன் ஆட்டோ கன்சல்டன்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். 5 ஆண்டுகளாக பழகி காதலித்து வந்த நிலையில் மாணவி பாதிக்கப்பட்டது அவருடைய காதலனுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதனால் மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதித்து உள்ளார். நடந்த கொடூர சம்பவத்தை ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டு மாணவியோடு வாழ்க்கையில் இணைய முடிவு செய்து உள்ளதாக காதலன் கூறினார். இவ்வாறு அரசு வக்கீல் ஜிஷா கூறினார்.
