சென்னை,
2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார். மேலும், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா அய்யர், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ திரைப்படம், வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
