78 வயது முதியவரை ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர் பகுதியில் வசித்து வருபவர் 78 வயது முதியவர். இவரது முகநூல் கணக்கின் மூலம் ஒரு இளம்பெண் பழக்கமாகியுள்ளார். இந்த நிலையில் முதலில் நண்பர்களாக பழகிய இவர்களது பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது. பின்னர் அந்த பெண் தனது வாட்ஸ்-அப் எண்ணை முதியவருக்கு கொடுத்து வீடியோ கால் மூலம் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்த அந்த பெண் முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதில் பயந்த அந்த முதியவர் ஆரம்பத்தில் ரூ.2 லட்சத்தை அந்த பெண் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த பெண் கூடுதலாக பணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அதற்கு முதியவர் தன்னிடம் வேறு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் முதியவரின் அந்தரங்க வீடியோக்களை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் முதியவரிடம் விசாரித்துள்ளனர். இதில் பெண்ணிடம் சிக்கி பணத்தை இழந்ததை முதியவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து முதியவரின் மருமகள், தனது மாமாவிடம் தவறாக பழகி பணம் பறித்ததாக கடந்த மார்ச் 3-ந் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் செல்போன் எண், வங்கி கணக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்வதாக குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link