டெஹ்ரான்,
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அந்த நாட்டின் மீது கடந்த 28-ம் தேதி அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலுடன் சேர்ந்து நடத்திய இந்த ராணுவ அதிரடியில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் வெகுண்டெழுந்த ஈரான்,இஸ்ரேலையும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகிறது.
வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வரும் இந்த போர் இன்றுடன் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில் இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில், அந்நாட்டில் இருந்து பெரும்பாலான இந்தியர்கள் வெளியேறிவிட்ட நிலையில் இன்னும் சில அங்கேயே தங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஒன்றை அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரானில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக தூதரகத்தின் உதவி இல்லாமல் எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தூதரகத்திடம் இருந்து வெளிப்படையாக அறிவுரைகளை பெற்ற பின்னரே, எல்லைப்பகுதிகளை நோக்கி செல்ல வேண்டும்.
தனிநபர்கள் யாரும் ஈரானை விட்டு வெளியேறி குறிப்பிட்ட 3-வது நாட்டிற்குள் நுழைய முடியாமல் போனால் அவர்களுக்கு தூதரகம் உதவு செய்யும் நிலையில் இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
இந்தியர்களுக்கு உதவ தூதரகத்தை கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு (+98 912 810 9115, +98 912 810 9102, +98 912 810 9109, +98 9932179359) இந்திய தூதரகத்தின் மின்னஞ்சல் முகவரி (co*********@*****ov.in)
