திருப்பதி,
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருப்பதியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வருகிற 17 முதல் 25-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதற்கு முன்ன தாக பாரம்பரிய முறையில் 13-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடத்தப்படுகிறது. 13-ந்தேதி அதிகாலை சுப்ர பாதத்தில் கோதண்டராமரை துயிலெழுப்பி தோமால சேவை, கொலு மற் றும் பஞ்சாங்க சிரவணம் நடக்கிறது.
தொடர்ந்து காலை 6.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடக்கிறது. அப்போது கோவிலின் மூலவர் அறை, சுவர்கள், மேற்கூரைகள், மாடங்கள், தூண்கள், பூஜைகளுக்கு பயன்படுத்தப்பட கூடிய பித்தளை, தாமிர பாத்திரங்கள் உள் பட கோவில் வளாகம் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
அதன்பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைகற்பூரம், வெற்றிலை, சந்தனம், குங்குமம் ஆகிய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட புனித நீர் கலவையை கோவில் வளாகம் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன்பிறகு மூலவருக்கு பூஜைகள் முடிந்ததும், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
