சென்னை,
இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக சமையல் எரிவாயு விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களிலும் இன்று ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், இன்றுடன் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
”தமிழ்நாட்டில் வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை. வணிக சிலிண்டர்களில் மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு முறை பதிவு செய்து, 25 நாட்கள் பிறகே மீண்டும் சிலிண்டருக்கு பதிவு செய்யும் வகையில் நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கையிருப்பு உள்ள சிலிண்டர்களை மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்களில் உள்ள உணவகங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”
இவ்வாறு தெரிவித்துள்ளது.
