போர் சூழல்: எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்கள் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 100 டாலரை தாண்டி இருந்தது. ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து மத்திய அரசு உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகையில், “சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் இல்லை. விலை அழுத்தத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இப்போதைக்கு தாங்கிக் கொள்ளும். அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயும், பெட்ரோல், டீசலும் கையிருப்பில் உள்ளன. தடையற்ற வினியோகத்துக்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பெட் ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிக்கொள்ளவும், சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கும் போது நஷ்டத்தை தாங்கிக்கொள்ளவும் அனுமதிக்கும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதை 25 நாட்கள் என்று மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது.

இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

இந்தியாவில், ஒரு குடும்பம் ஓராண்டுக்கு சராசரியாக7 அல்லது 8 சிலிண்டர்களை பயன்படுத்துகிறது. அதாவது, 6 வாரங்களுக்கு முன்பாக அடுத்த ‘ சிலிண்டர் வாங்கத் தேவையில்லை. எண்ணெய் நிறுவனங்களிடம் போதிய சமையல் கியாஸ் கையிருப்பு உள்ளது. இருப்பினும், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதையும், செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்படுவதையும் தடுக்க சமையல் கியாஸ் முன்பதிவு கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தடையற்ற வினியோகத்துக்காக, சமையல் கியாஸ் உற்பத்தியை அதிகரிக்குமாறு சுத்திகரிப்பு நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

சிலிண்டர் விநியோகத்தில் வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு மட்டுமே வழங்க வேண்டும். ஓட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்குவதற்கான வழிமுறை குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

Source link