டெல் அவிவ்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
இதனை தொடர்ந்து ஈரான் நடத்த் வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. வளைகுடா நாடுகளில் வசிக்கும் பல்வேறு நாட்டு குடிமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த சூழலில், ஈரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலால், கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலில் 191 பேர் காயம் அடைந்து உள்ளனர். இதனை தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு உள்ள குடிமக்கள் மற்றும் வீரர்கள் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இதில், ஒருவர் கவலைக்குரிய வகையில் உள்ளார். 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேருக்கு மித அளவிலான பாதிப்பு காணப்படுகிறது. 172 பேர் குணமடைந்து உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று இஸ்ரேல் அமைச்சக தகவலின்படி, ஈரானுடன் போர் தொடங்கியது முதல் இஸ்ரேலில் 2,339 பேர் தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
