சென்னை,
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியாவுக்கு இரவு நேர விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விமான நிலைய ஓடுபாதை நீட்டிக்கப்படும். புதிய முனையம் அமைக்கப்படும்.
இன்று 6 மிகப்பெரிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் 2.0, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துதல், மேற்கு வங்கத்தில் சந்திராகாச்சி- கராக்பூர் 4-வது ரெயில்வே பாதை, சைந்தியா- பாகுர் 3-வது பாதை, மத்திய பிரதேசத்தில் பத்னாவார் தண்ட்லா- திமார்வானி 4 வழி நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன் மதிப்பு 8.80 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
