தமிழ்நாட்டு மக்களோடு பழகியதை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது: கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அன்புச் சகோதர சகோதரிகளே! தமிழ்நாட்டுச் சொந்தங்களே! உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி கடந்த 54 மாதங்கள் உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். வாழ்க்கையின் ஓட்டத்தில் இப்போது உங்களைவிட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த 54 மாதங்களில், உங்களோடும் உங்கள் வழியாக இந்தப் பெருமக்களோடும் வாழ்ந்தேன். மகிழ்ந்தேன். செம்மாந்த நெறிகளில் திளைத்தேன், அன்பின் அரவணைப்பில் ஆழ்ந்து கலந்தேன். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மரபிலும் நவீனத்திலும் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டுக்கு கவர்னராகப் பொறுப்பேற்று வந்தபோது. கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் முழுமையாகத் தீர்ந்திருக்கவில்லை. இருப்பினும் நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னைப் பெரிதும் கவர்ந்தன.

யாரைச் சந்தித்தாலும், எங்கே போனாலும், புன்னகைகள்தாம் என்னைச் சூழ்ந்தன. தெரிந்தவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள் என்றெல்லாம் இல்லாமல், எளிய மக்கள் எல்லோரும், குழந்தைகள் உட்பட முகத்தில் முறுவலோடும். கண்களில் ஆர்வத்தோடும். நெஞ்சங்களில் நேசத்தோடும் பழகுகிற பாங்கினைக் கண்டேன். மனித நேய உறவினால் பொலியும் மாபெரும் தமிழ் குடும்பத்தில் ஒருவனாகவே உணர்ந்தேன். இன்றும் உணர்கிறேன்.

சங்கப் புலவர்களின் சமுதாய நோக்கம் திருவள்ளுவரின் மாண்பு, தமிழின் சம கால இலக்கியங்கள். மரபு சார்ந்த தமிழ்ப் பழக்கங்கள் என்று தமிழின் பல்வேறு பரிமாணங்களையும், தமிழ் மக்களின் பரிமாணங்களையும் நேரடியாக அறிகிற பேறும், அறிஞர்களோடு கலந்து அளவளாவுகிற பேறும் நிறையவே எனக்குக் கிட்டியுள்ளன. அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு – உங்களின் அயராத உழைப்பு, உழைப்பின் களிப்பு.

தலைநகரம் சென்னை முதல் நெல்லையிலும் கன்னியாகுமரியிலும் உள்ள கடைக்கோடி கிராமங்கள், கிழக்குக் கடற்கரை முதல் மேற்கு மலைச் சாரல் என்று பற்பல ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் சென்றேன். ஊர்களின் அமைப்பு, அளவு, வட்டார வழக்குகள் போன்றவை மாறுபட்டாலும், உங்கள் அனைவரின் அன்பும், உழைப்பும். உழைப்பில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியும். அறிவு முதிர்ச்சியும் மாறவேயில்லை.

மாணவர்களிடம் இருக்கிற துள்ளலையும் சிரிப்பையும் வயது முதிர்ந்தவர்களிடமும் கண்டேன்; உயர் தொழில்நுட்ப விவாதங்களில் காண்கிற நுணுக்கங்களை, உழவாரப் பணியிலும் பார்த்தேன் நான் சென்ற இடங்களிலும் கண்ட காட்சிகளிலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு மெய்யாக மிளிர்ந்திருந்தது. தமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும், நவீனத்துவத்தின் மேன்மையை முறையாக உணர்ந்திருக்கிறார்கள்.

நவீனகால தொழில்நுட்ப மேம்பாடுகளை அழகாகப் பயன்படுத்துகிறார்கள். ‘செயற்கை நுண்ணறிவை இயற்கையான செறிவோடு கையாளுகிறார்கள். பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சென்றபோது இதைக் கண்டேன் மாணவர்களோடும் போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாபவர்களோடும் பல்வேறு வகையான பயிற்சிகளுக்குத் தயாராபவர்களோடும் உரையாடிய நிகழ்ச்சிகளில் அவர்களின் ஆற்றலும் திறமையும் என்னை வியப்பில் ஆழ்த்தின. இத்தகைய உரையாடல் நிகழ்வுகள். எனக்குள் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தோற்றுவித்தன. ஆங்கிலத்தில், ‘என்ரிச்சிங் எக்ஸ்பீரியன்ஸ்’ என்பார்களே, அப்படிப்பட்ட மேம்பாட்டு அனுபவம்.

தமிழ்நாட்டின் மேன்மைகளில், ஆகச் சிறந்த மேன்மை. கோயில்கள்! தில்லைச் சிதம்பர நடராஜரும் திருவரங்க ரங்கராஜரும் தமிழன்னையின் தமிழ் மக்களின் குடும்ப உறுப்பினர்கள். தமிழ்கூறு நல்லுலகை எப்போதும் பாதுகாத்து அருள்பாலிப்பார்கள். திருக்கோயில்களில் காணப்படுகிற சிற்பங்களும். சுவரோவியங்களும், அறவழிக் காட்சிகளும், கல்வெட்டுகளும் பாரதப் பண்பாட்டுக் கருவூலங்கள். இவற்றையெல்லாம் பாதுகாப்பது மட்டுமில்லாமல் இளைஞர்களும் அறிஞர்களும் மேலும் மேலும் பயின்று, ஆராய்ந்து, பாரதத் திருமரபின் ஞானப் பெருக்கத்திற்கு உதவவேண்டும்.

தேசிய நீரோட்டத்திற்குத் தலைவெள்ளம் தந்தவர்கள் தமிழர்கள். பூலித்தேவனும் கட்டபொம்மனும் வீரமங்கை வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் எவ்வாறெல்லாம் பாடுபட்டனர். எப்படியெல்லாம் குரல் கொடுத்தனர் என்பதை என்னைக் காட்டிலும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். 1857ம் ஆண்டின் சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக 1806ம் ஆண்டே வேலூர் புரட்சி எழுந்தது. தமிழிலக்கியங்கள், பாரத நாட்டைப் பற்றிக் கூறும்போது ‘நாவலந்தீவு” என்னும் பெயரைப் பயன்படுத்துகின்றன.

நிலவியல் ஆய்வுகளின்படி இந்திய தீபகற்பத்தை இப்பெயரோடு பொருத்தலாம் மருது சகோதரர்கள். ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள். செக்கிழுத்த செம்மல் வ உ சியும். பாரத மாதாவுக்குக் கோவில் கட்ட விழைந்த சுப்பிரமணிய சிவாவும், கொடி காத்த குமரனும், சமுதாய விலங்குகளையும் நோய்ப் பிணிகளையும் அகற்ற முற்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் வானரப் படை வைத்து தேசியத்திற்குப் பணி செய்த ருக்மிணி லட்சுமிபதியும், காந்தியத்தையும் பெண்ணியத்தையும் பேணி வளர்த்த அம்புஜம்மாளும் இன்னும் பலரும் தேசிய நீரோட்டத்தில் நீந்தித் திளைத்தவர்கள்: ஆசைப்பட்டவர்கள். நாமும் அவ்வாறே ஆனந்தப்படவேண்டும் என்று

அன்புச் சகோதர சகோதரிகளே, சொல்லச் சொல்ல விரியும் என்பதாக என்னுடைய அனுபவங்களும் ஆனந்தமும் விரிந்துகொண்டே போகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை நீங்கள் காட்டிய அன்பு. உங்களின் அன்பை விரிக்க வார்த்தைகள் போதா-என் நன்றியை உரைக்கவும் வார்த்தைகள் போதா! அன்பானவர்களே! அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலம் வளர என்றென்றும் பிரார்த்திப்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link