சென்னை,
ஆன்லைனில் புதிது புதிதாக திட்டங்களை அறிவித்து, அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி அதில் பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். கிரிப்டோ கரன்சி என்பது ஒரு டிஜிட்டல் சொத்து ஆகும்.
இது வங்கி அல்லது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. ஆனாலும் தற்போது கிரிப்டோ கரன்சி மோசடி அதிகரித்து வருகிறது. எனவே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து மோசடி ஆசாமிகளிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதை அரசு அங்கீகரிக்கவில்லை. இதனால் அதன் மீது முதலீடு செய்வது பாதுகாப்பற்றது. தற்போது மோசடி ஆசாமிகள் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். முதலில் தங்கள் நிறுவனம் குறித்து பேசி அதிக தொகை லாபமாக உடனடியாக கிடைக்கும் என்று ஆசையை தூண்டுகிறார்கள்.
அதை நம்பி முதலீடு செய்யும் நபர்களை செல்போன் செயலியை பதிவி 3 றக்கம் செய்ய சொல்கிறார்கள். அதற்கு ஐ.டி. மற்றும் ரகசிய குறியீடு எண் கொடுத்து அதன் மூலம் முதலீடு செய்யுமாறு கூறுகிறார்கள். மேலும் அந்த செயலியில், எவ்வளவு கிரிப்டோ கரன்சி வாங்கி உள்ளோம், அதன் மதிப்பு எவ்வளவு என்பதும் உடனே தெரியும். எனவே தேவைப்படும் போது அந்த தொகையை நமது வங்கி கணக்குக்கு மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவிக்கிறார்கள்.
அதை நம்பி முதலீடு செய்பவர்களுக்கு முதலில் லாபத்தொகையை வங்கிக் கணக்கிற்கு மாற்ற அனுமதி அளிக்கிறார்கள். இதனால் தொடர்ந்து அதிக பணத்தை முதலீடு செய்கிறார்கள். ஆனால் அதன் பிறகு பணத்தை எடுக்க அனுமதி அளிப்பது இல்லை. இதன் மூலம் பணத்தை மோசடி செய்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் மூலம் பணத்தை முதலீடு செய்து ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
