சென்னை,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை உண்ட 43 மாணவ மாணவியர், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் அனைவரும் விரைந்து நலம்பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
வீண் விளம்பரங்கள், தற்புகழ்ச்சி பாராட்டு விழாக்கள் என, வெட்டி வேலைகளுக்கெல்லாம் நேரம் இருக்கும் திமுக அரசுக்கு, எளிய குடும்பப் பின்னணி கொண்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை கண்காணிக்க நேரம் இல்லையா?
இதனை வெறும் தவறு என்று கடந்து செல்ல, இது முதல் முறை அல்ல. மீண்டும் மீண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் நடக்கும் இந்த அலட்சியம், திமுக அரசின் நிர்வாக தோல்விக்கான அவமானகரமான சான்று. இது மன்னிக்க முடியாத குற்றம். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதி.
ஒவ்வொரு முறையும், சமையல் பணியாளர்கள் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ளும் போக்கை விட்டுவிட்டு, எதனால் பள்ளி மாணவர்களுக்கான உணவில் பல்லி விழுகிறது? பாதுகாப்பான சமையலறை இல்லையா? போதுமான உபகரணங்கள் இல்லையா? ஏன் அடிப்படை வசதிகள் கூட அரசுப் பள்ளிகளில் இல்லை? இவை எல்லாம் ஆராயப்பட வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவைக் கூட வழங்க முடியாத நிலை தமிழகத்தில் ஏன் தொடர்ந்து இருக்கிறது என்பதற்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், சமூக நலத்துறை அமைச்சரும், உடனடியாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். தெரிவித்துள்ளார்.
