சிட்னி,
21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா வில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப் பட்டு லீக்கில் மோதின. ‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி சிட்னியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேயை எதிர்கொண்டது.
அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் சீன தைபேயிடம் தோல்வியை தழுவியது. 36-வது நிமிடத்தில் மனிஷா கல்யாண் ‘பிரீகிக்’ வாய்ப்பில் இடது காலால் ஓங்கி உதைத்த பந்து, அரண்போல் வரிசையாக நின்ற வீராங்கனைகளை தாண்டி கோல் வளையத்துக்குள் புகுந்து கோலானது மட்டுமே ஆறுதலாகும்.
இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும். லீக் சுற்று முடிவில் ஜப்பான் (3 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், சீன தைபே (2 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றன. வியட்நாம் (ஒரு வெற்றி. 2 தோல்வி) 3-வது இடமும், இந்தியா (3 ஆட்டங்களிலும் தோல்வி) கடைசி இடமும் பெற்ற வெளியேறின.
இதற்கிடையே இந்த ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்த போது இந்திய கோல் கீப்பர் பந்தோய் சானு, எதிர்பாராதவிதமாக கேப்டன் சுவீட்டி தேவியுடன் மோதி விழுந்தார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
