கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு; 1 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதனால், உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த சூழலில், இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்தது. சில இடங்களில் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான கியாஸ் சிலிண்டர் விநியோக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏறக்குறைய ஓட்டல்கள், உணவு விடுதிகளை மூட கூடிய சூழல் காணப்படுகிறது.

மும்பை, புனே, நாக்பூர் நகரங்களிலும், டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன என இந்திய ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் சங்கத்திற்கான கூட்டமைப்பின் துணை தலைவர் மற்றும் அதன் மேற்கிந்திய செய்தி தொடர்பாளரான பிரதீப் ஷெட்டி கூறினார்.

இந்நிலையில், இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறினார். வெவ்வேறு இடங்களில் இருந்து மற்றும் பல்வேறு வழிகளில் இந்தியாவுக்கான எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்ந்து நடந்து வருகின்றது.

போர் சூழலிலும், ஆலைகளுக்கான 70 முதல் 80 சதவீத எரிபொருள் வினியோகம் இருக்கும் என அவர் கூறினார். இந்நிலையில் டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று பேசும்போது, நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளது. இதற்கு காரணம், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து இந்தியாவுக்கு 90 சதவீத கியாஸ் சிலிண்டர் இறக்குமதியாகிறது.

ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் தட்டுப்பாடு உள்ளது. டெல்லி என்.சி.ஆர்., பீகாரில் இன்னும் 2 நாட்களில் ஓட்டல்களை மூடக்கூடிய சூழல் உள்ளது என கூறினார். இதனால் 1 கோடி பேருக்கு வேலையில்லாமல் போக கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

நாம் சுதந்திரத்துடனும், இறையாண்மையுடனும் செயல்பட, யாருடனும் கூட்டணி வைக்காத வெளியுறவு கொள்கையை கொண்டுள்ளோம். ஆனால், ஈரானுக்கு எதிரான போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன் இஸ்ரேல் பிரதமருடன் நம்முடைய பிரதமர் உறுதுணையாக நின்றார். 75 ஆண்டுகளாக உள்ள வெளியுறவு கொள்கையை அழித்து விட்டு பிரதமர் மோடி ஒரு தவறு செய்து விட்டார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Source link