திருவனந்தபுரம்,
கேரளாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு முன்னுரிமை அளித்து கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்ய வினியோகஸ்தர்களுக்கு, எண்ணெய் நிறுவனங்கள் தகவல் அனுப்பியுள்ளது.
இதன் காரணமாக ஓட்டல்கள், கேட்டரிங் உள்ளிட்ட உணவு உற்பத்தி நிறு வனங்களுக்கான வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது. பல பெரிய ஓட்டல்களில் இன்னும் 5 நாட்களுக்கான எரி பொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான சிலிண்டர்கள் மட்டுமே இருப்பு உள்ளது. மற்ற சிறிய ஓட்டல்கள், தெருவோர கடைகள் இன்று முதல் மூடப்படும் நிலை உள்ளது.
பல ஓட்டல்களில் வணிக சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு வாங்கி சேமித்து வருகிறார்கள். சில சைவ உணவு ஓட்டல்களில் உணவு பட்டியலில் மாற்றம் செய்து கட்டணத்தை குறைத்து வியாபாரம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளையில் எந்த வித பிரச்சினையும் இருக் காது என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
கேரளாவில் எர்ணாகுளம் முதல் காசர்கோடு வரை வீட்டு உபயோகத்துக்காக குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகிக்கப்படுவதால் அதிலும் எந்த தட்டுப்பாடும் இருக்காது என்று அதானி கியாஸ் நிறுவன விற்பனை பிரதிநிதி அஜய் தெரிவித்துள்ளார்.
