கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தம்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை – ரஷியா விளக்கம்

பிஜீங்,

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்தியா மீதான 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தார்.

அப்போது, ‘ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார். இதன்மூலம் ரஷியா உக்ரைன் போர் முடிவுக்கு வரும்’ என்றும் கூறியிருந்தார். ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா தரப்பில் எவ்வித அதிகாரபூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கு மத்தியில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்திய தரப்பில் இருந்து ரஷியாவுக்கு இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. இந்தியாவுடன் அனைத்து நிலைகளிலும் உறவை மேம்படுத்த ரஷியா எப்போதும் தயாராகவே இருக்கிறது என க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா உறுதியளித்திருப்பதாக வெள்ளை மாளிகை செயலாளர் கரோலின் லியாவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கரோலின்,

“ரஷிய எண்ணெய் இறக்குமதியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிப்பதற்கும் இந்தியா உறுதிகொண்டுள்ளது.

வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தையும் அமெரிக்கா நிர்வகிப்பதால், இந்தியா வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்க முடியும். இது அமெரிக்கா தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில், ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ரஷிய எண்ணெயை தவிர்த்து, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து கூடுதல் எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில், ரஷிய அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Source link