சென்னை,
தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் ‘டிஜிட்டல் கைது’ என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். ‘டிஜிட்டல் கைது’ என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
சமீபத்தில் சென்னை நொளம்பூர் பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி (வயது 60) என்ற ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி ரூ. 1 கோடி அளவுக்கு பணத்தை இழந்துள்ளார். இவருக்கு டெல்லியில் இருந்து என்.ஐ.ஏ. போலீஸ் அதிகாரிகள் பேசுவதுபோல பேசி மோசடி கும்பல் பணத்தை பறித்துள்ளது. ‘நீங்கள் தேசவிரோத செயலில் ஈடுபட்டுள்ளீர்கள். உங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். உங்களை டிஜிட்டல் கைது செய்திருக்கிறோம். உடனடியாக டெல்லியில் என்.ஐ.ஏ.போலீஸ் அலுவலகத்தில் வந்து ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் சென்னைக்கு வந்து கைது செய்து இழுத்து செல்வோம் என்று மிரட்டியிருக்கிறார்கள்.
நீங்கள் ஜெயிலுக்கு போகாமல் இருக்கவேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் ரூ 1 கோடியை செலுத்தவேண்டும்’ என்று அந்த கும்பல் பயமுறுத்தியிருக்கிறது. இதனால் பயந்துபோன வங்கி அதிகாரி சத்தியமூர்த்தி மோசடி கும்பல் சொன்ன வங்கி கணக்குக்கு ரூ 1 கோடியை அனுப்பியிருக்கிறார்.
ரூ.1 கோடி பணத்தை இழந்த சத்தியமூர்த்தி இதுதொடர்பாக தனக்கு தெரிந்த வங்கி அதிகாரிகளோடு ஆலோசனை செய்துள்ளார். அப்போதுதான் அவர் மோசடி கும்பலிடம் மோசம் போயிருப்பது தெரியவந்தது. தான் கஷ்டப்பட்டு சேர்த்துவைத்திருந்த ரூ.1 கோடி பணத்தை இழந்து தவித்த அவர் இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள்.
