சென்னை,
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழகத்தில் பின்னலாடைத் தொழில், ஜவுளி, தோல் பொருட்கள் கடல் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரிவுகள் கடும் சரிவைச் சந்தித்து வந்தன. இந்தியப் பொருட்களின் விலை உயர்வால் அமெரிக்க நிறுவனங்கள் தங்களது ஆர்டர்களை வேறு நாடுகளுக்கு மாற்றியதால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியானது.
இந்தநிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாக குறைத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் காரணமாக அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. உற்பத்திகள் புத்துயிர் பெறுவதுடன் தமிழக தொழில்துறையில் மீண்டும் வசந்தம் உண்டாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா மீதான வரிகுறைப்பு குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தார் என்பதை உறுதி செய்கிறார் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர். இந்திய – அமெரிக்க ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளைப் பட்டியலிடுகிறார் அமெரிக்க அதிகாரி. இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பா.ஜ.க.?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
