சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: பெங்களூருவில் 40 சதவீத ஓட்டல்கள் மூடல்

பெங்களூரு,

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருவதுடன், மோதல் தொடர்ந்து வருகிறது. மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

மேலும் ஈரான் கடல் வழியாக அதாவது ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் பிற நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு இந்த வகையான கியாஸ் சிலிண்டர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் ஓட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் உணவு தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டல், உணவகங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சிறு ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. சற்று பெரிய ஓட்டல்களில் கூடுதல் எண்ணிக்கையில் கியாஸ் சிலிண்டர்கள் இருக்கின்றன.

நேற்று முன்தினம் பெங்களூருவில் 20 சதவீத ஓட்டல்கள் கியாஸ் சிலிண்டர் கிடைக்காமல் மூடப்பட்டன. 2-வது நாளாக நேற்றும் பல ஓட்டல்கள், டீக்கடைகள், துரித உணவகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று மட்டும் 40 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூருவில் உள்ள 10 ஆயிரம் ஓட்டல்களும் மூடப்படும் அபாயம் உள்ளது. வணிக சிலிண்டர் பற்றாக்குறையால், தற்போது பெரும்பாலான ஓட்டல்களில் அரிசி சாதம், தோசை, இட்லி, சாம்பார் போன்ற முக்கியமான உணவு வகைகள் மட்டும் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.

இதற்கிடையே போதிய இடவசதி உள்ள ஓட்டல்களில் விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவுகளை தயாரிக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் சில அத்தியாவசியமான உணவுகளை மட்டும் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.

Source link