கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விஜய்யிடம் வரும் 15-ஆம் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்த உள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரிடமும் சி.பி.ஐ. விசாரித்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனை ஏற்று வரும் 17-ஆம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி, இது தொடர்பாக கூறியதாவது: “சி.பி.ஐ. சார்பில் எனக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேரில் சென்று கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிப்பேன். அங்கு சென்று எந்த அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம். ஏனெனில் நிகழ்ச்சியை நடத்தியது ஒரு இயக்கம்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்தது காவல்துறை. இதில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்தேன். இதேபோல் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வேறு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்த்தனர். அப்படியென்றால் அனைவருக்கும் சம்மன் அனுப்பப்படுமா? சம்பவத்தன்று மருத்துவமனைகளுக்கு சென்ற அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
