தமிழக அரசை கண்டித்து கோவையில் வரும் 16-ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிர்வாக திறனற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான, கடந்த 58 மாதகால தி.மு.க. ஆட்சியில், மக்கள் நிம்மதியுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தாத காரணத்தாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்ட காரணத்தாலும், மக்கள் பல்வேறு வகைகளில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும், கடந்த ஐந்தாண்டுகால திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கோவை மாவட்ட மக்களுக்கு எந்தத் திட்டங்களையும் தராமல் புறக்கணித்ததைக் கண்டித்தும்; புதிதாக குப்பை வரி, சொத்து வரி விதித்தும், மின் கட்டணம், பால் விலை, அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்களின் விலைகளை உயர்த்தியும்; பழுதடைந்த சாலைகளை சீரமைக்காமலும், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, போதைப் பொருட்களின் நடமாட்டம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறியும், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கட்டணம் விதிப்பு முதலான மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கோவை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு மாவட்டங்களின் சார்பில், 16.3.2026 (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், செஞ்சிலுவைச் சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான S.P. வேலுமணி, M.L.A., அவர்கள் தலைமையிலும்; கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவருமான ப. தனபால், M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் (பொறுப்பு), முன்னாள் அமைச்சருமான A.K. செல்வராஜ், M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ. தாமோதரன், M.L.A., கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அம்மன் K. அர்ச்சுணன், M.L.A., கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் P.R.G. அருண்குமார், M.L.A., கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் K.R. ஜெயராம், M.L.A., சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் V.P. கந்தசாமி, M.L.A., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள்; மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாகத் திறனற்ற திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link