விழுப்புரம்,
விழுப்புரம் கொள்ளாரில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்பேசியதாவது:-
சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியும், தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத முத்திரைத் திட்டங்களை செயல்படுத்தியும் தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். சட்டங்களையும், திட்டங்களை நிறைவேற்றுவது மட்டுமல்ல, தமிழ்நாடு மக்கள் ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் திராவிட மாடலின் நோக்கம்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புது துறையை உருவாக்கி, அதன் மூலம் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் இருந்து பெற்ற 4.57 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம். 2021-ம் ஆண்டு நவம்பர் அன்று முதல்வரின் முகவரி’ என்ற ஒருங்கிணைந்த புதிய துறையை உருவாக்கியதன் மூலம், மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களில் இதுவரை 1.49 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அரசு சேவைகளை பெறுவதில் மக்களுக்கு அலைச்சல் இருக்கக்கூடாது. என்னைப் பொறுத்தவரை அரசு என்பது 24 மணிநேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும். அதன்படிதான் செயல்படுகிறோம். நாம் ஒருபுறம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிட்டு வந்தால், அந்த வளர்ச்சியை கெடுக்க மத்திய பா.ஜ.க அரசும் அதன் கூட்டாளிகளும் பல செயல்களை செய்து வருகிறார்கள். அதற்கான சமீபத்திய உதாரணம்தான் மத்திய அரசின் பட்ஜெட். இதுவரை ஒப்புக்கு சொல்லிவந்த திருக்குறள் கூட இம்முறை இல்லை.
தமிழ்நாட்டிற்கு தேர்தல் வரப்போகும் நிலையிலும், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணித்துள்ளது. ஆந்திரா, ஒடிசாவில் தேர்தலின் போதாவது திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால் பெயருக்கு கூட தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. மத்திய அரசும் அதன் கூட்டாளிகளும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்கும் அனைத்தையும் செய்கிறார்கள்.
மத்திய பாஜகவுக்கு தேர்தல் ரிசல்ட் முன்கூட்டியே தெரிஞ்சிடுச்சு போல.. எப்படியும் தோற்கத்தானே போறோம் இவங்களுக்கு எதுக்கு நிதி? என பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கவில்லை. தமிழர்களின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மத்திய பா.ஜ.க அரசு கொண்டிருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாகதான் மத்திய பட்ஜெட் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
