சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
திமுக அரசு பதவியேற்ற நாள்முதல், தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும்; பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும்; ஆளும் கட்சியினரின் அராஜகங்கள், வன்முறைகள், சட்ட விரோதச் செயல்கள் குறித்தும், அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும், தொடர்ச்சியாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த செய்திகளே, நாள்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்துத் தாக்குதல், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது, போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழ் நாட்டில் நடைபெறும் மக்கள் விரோதச் செயல்கள் அனைத்தையும் திமுக அரசின் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
கடந்த ஐந்தாண்டுகால விடியா திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் இத்தனை அவலங்களும் தொடரக் கூடாது. மக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதற்கெல்லாம் விரைவில் விடிவு காலம் வரஉள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்த வகையில், திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, வருவாய் மாவட்டத் தலைநகரங்களில், வருகின்ற 17.3.2026 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்து, மிகச் சிறப்பான முறையில் நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசைக் கண்டித்து, வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள்; ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும்
நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏழை, எளிய மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், அவர்களுடைய வாழ்வாதாரத்தை சீர்குலைத்துள்ள விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
