அரசியல் மாநாடுகளில் தொண்டர்கள் துண்டுகளை சுழற்றுவது பிரபலம் ஆகிறது… விற்பனை 'படுஜோர்'

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னதாகவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பிரமாண்ட கட்சி மாநாடுகள், தேர்தலுக்கு முன்னதாகவே பிரசார கூட்டங்கள் என இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

அப்படியாக மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் தற்போது தொண்டர்கள் அந்தந்த கட்சிகளின் துண்டுகளை கையில் பிடித்து தலைக்கு மேல் சுழற்றுவது பிரபலம் ஆகி வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக கட்சித் தலைவர்கள் மாநாடு, பொதுக்கூட்டங்களின் மேடைகளுக்கு வரும்போது அவர்களை உற்சாகமாக வரவேற்கும் கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக இதை தொண்டர்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இது அந்த கூட்டங்களில் ஒரே நேரத்தில் பெரும்பாலானோர் கட்சித் துண்டுகளை சுழற்றுவது ஒரு தனித்துவமான காட்சியை உருவாக்கி உற்சாகத்தை பிரபலப்படுத்துவதாகவும், மாநில மற்றும் தேசிய கட்சிகளின் மாநாடுகள், கூட்டங்களில் சமீப காலங்களாக இது டிரெண்ட் ஆகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

கழுத்தில் அணியவும், தோளில் போட்டுக்கொள்ளவும், தலையில் கட்டிக்கொள்ளவும் பயன்படுத்தப்பட்ட இந்த கட்சித் துண்டுகள் இப்போது உற்சாகத்தில் சுழற்றவும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்காக ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் கட்சித் துண்டுகள் வாங்கப்படுகின்றன. இதனால் அதன் விற்பனை கடைகளில் படுஜோராக இருப்பதாக கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link