சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி. ராஜா, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எம். அப்துல்லா, பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவர் எழிலன் நாகநாதன், ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ். சுரேஷ் சம்பந்தம் அடங்கிய குழுவினர் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை, ஆதிதிராவிடர் மகாஜனசபை, அனைத்து முதலியார் வேளார் சங்கங்களின் பேரவை, இளைஞர் படுகர் சங்கம், மக்கள் மறுமலர்ச்சி கழகம், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் உள்ளிட்ட சமுதாய பிரதிநிதிகள், வணிகர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, மனுக்களையும் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு அமைப்புகளின் கருத்துகளை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட உள்ளது. இன்று சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமூக அமைப்புகள் வந்திருந்தனர்.
அவர்களுடைய கருத்துக்களை அவர்கள் கூறியதாகவும் பல்வேறு அமைப்புகள் கல்வியாளர்கள் தொழில் முனைவோர் விவசாயிகள் பலதரப்பட்ட மக்கள் அவர்களுடைய கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர். அதில் எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் இணைத்துக் கொள்ளலாம் என்று பரிசீலனை செய்து முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளியிடப்படும்.
கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ் கட்சியிடம் நடந்து வருகிறது. தொகுதி எண்ணிக்கை குறித்து எதுவும் பேசவில்லை. குழுவில் இருக்கக்கூடியவர்கள்தான் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவார்கள். நாடாளுன்றத்தில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்தது ஏற்க முடியாது. எதாவது புதிய கட்சி கூட்டணிக்கு வந்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என கூறினார்.
