வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு – டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்கு டி.டி.வி.தினகரன் வருகிற 26-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2018-ம் ஆண்டு நடந்த தேவர் ஜெயந்தி விழாவின்போது, அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களை வரவேற்று அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பச்ச பேனர்கள், கொடிகள் அ.ம.மு.க.வினர் சேதப்படுத்தியதாக கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கமுதி கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பினர் மத்தியில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, டி.டி.வி.தினகரன், புகார்தாரர் முனியசாமி ஆகியோர் வருகிற 26-ந்தேதி நேரில் ஆஜராகி, சமரசம் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல 2021-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களை அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. வக்கீல்கள் அணி இணை செயலாளர் பாபு முருகவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில், டி.டி.வி.தினகரன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கிலும் இருதரப்பினரும் சமரசமாக போவதாகவும், அதனால் வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று இருதரப்பினரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கிலும் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 26-ந்தேதிக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தள்ளிவைத்தார்.

Source link