புதுடெல்லி
ஈரான் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரான் நாடும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால், கப்பல்களில் பணியாற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, வணிக கப்பல்கள் மீது சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் இந்திய பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவரை காணவில்லை. 4 பேரும் வணிக கப்பல்களில் பணியாற்றியவர்கள். ஓமன் மற்றும் ஈராக்கிலுள்ள எங்களுடைய தூதரகங்கள் மற்றும் துபாயிலுள்ள தூதரகமும் இந்தியர்களின் உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு வருவதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அதனாலேயே, இதுபோன்று வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது என கூறினார். அவர் எந்தெந்த கப்பல் தாக்கப்பட்டு இந்தியர்கள் பலியானார்கள் என்ற தகவலையும் கூறியுள்ளார்.
இதில், மார்ஷல் தீவுகளுக்கான கொடியுடன் சென்ற விஷ்ணு என்ற கப்பல் ஈராக் அருகே தாக்கப்பட்டது. இதில், இந்தியர் ஒருவர் பலியானார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன், அவருடைய உடலை இந்தியா கொண்டு வர வேண்டிய விசயங்களை மேற்கொள்வோம். இதுவரை 25-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காயமடைந்து உள்ளனர் என்று அவர் கூறினார்.
இதேபோன்று ஸ்கைலைட் கப்பல் மீது நடந்த தாக்குதலில், ஒருவர் பலியாகியும், ஒருவர் காணாமலும் போயுள்ளனர். எம்.கே.டி. வி.ஒய்.ஓ.எம். கப்பல் தாக்கப்பட்டதில் ஒருவர் பலியாகி உள்ளார் என கூறினார்.
