சென்னை,
இந்தியாவில் ஐ.பி.எல்போல் இங்கிலாந்தில் ’தி ஹன்ட்ரட்’ கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இங்கிலாந்தில் நடத்தப்படும் இந்த 100 பந்து கிரிக்கெட் தொடர் 2021 முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் ஜூலை 21 முதல் ஆகஸ்டு 16 வரை இங்கிலாந்தின் பல நகரங்களில் நடைபெற உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் நேரடி ஒப்பந்தம் மற்றும் தக்கவைப்பு அடிப்படையில் தலா 4 வீரர்களை வைத்திருக்கிறது.
அந்த வகையில் ஹாரி புரூக் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியிலும், ஜோப்ரா ஆர்ச்சர் சதர்ன் பிரேவ் அணியிலும் தொடர்கிறார்கள். இந்நிலையில் இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்றது.
ஏலத்தில் இங்கிலாந்தின் இளம் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் கோல்ஸ் அதிக கவனம் ஈர்த்தார். அவரை ரூ.4.81 கோடி மதிப்பில் லண்டன் ஸ்பிரிட் அணி வாங்கியது. இதன் மூலம் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் மாறினார்.
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ரூ.2.34 கோடிக்கு சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியது. மேலும் பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக்கை ரூ.1.72 கோடிக்கு பர்மிங்காம் போனிக்ஸ் அணி எடுத்தது.
இதற்கிடையில் ஜோ ரூட்டை ரூ.2.96 கோடிக்கு வெல்ஷ் பயர் அணி வாங்கியது. தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரமை ரூ.2.47 கோடிக்கு மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி எடுத்தது. அதே நேரத்தில் பாப் டு பிளிஸ்சிஸ், ஜேசன் ராய், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுப், ஹசரங்கா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இந்த ஏலத்தில் விலை போகவில்லை.
